தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Wednesday, November 21, 2012

16 உணர்வுகளை குறிவைக்கும் தாக்குதல்...

மனித நாகரீகம் தோன்றியது முதல், பொதுவில் செய்ய வேண்டிய விஷயம், மறைவில் செய்ய வேண்டிய விஷயம் என்று மனிதன் வகைப்படுத்தி வைத்திருந்தான். காரணம், தன்மானம் என்ற ஒன்றை காக்க வேண்டும் என்ற வேட்கை அவன் மனதில் இருந்தது தான்.

மிகப்பெரும்பான்மையோரால் இவை பாதுக்காக்கப்பட்டு வந்தாலும், ஒரு சிலரால் தவறவிடப்படும்  இது சமூகத்திற்கு மிகப்பெரும் தீங்கை விளைவித்து பெரும்பான்மையோரை வழிதவறச்செய்து கொண்டிருக்கிறது.

நான் ”டீன் ஏஜ்” என்ற பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்த சமயம், அப்பொழுது ஆனந்த விகடனில் வெளிவந்து கொண்டிருந்த ”டீன் ஏஜ்” கதைகள் அந்த சமயத்தில் 9 ஆம் வகுப்பில் காலடி எடுத்துவைத்திருந்த எங்களின் உணர்வுகளை சீண்டி வேடிக்கை பார்த்தது.
இத்தனைக்கும் இளைமறை காய்மறையாகவே ஒரு சில நிகழ்வுகள் அக்கதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பருவ வயது மாற்றங்கள், நெஞ்சில் நஞ்சை விதப்பதற்கு ஏதுவாக இருந்தது.
 
சிறிது காலத்திற்கு பின், ஆனந்த விகடனுடன் சரிக்கு சமமாக போட்டியிட இயலாத “குமுதம்” தேர்ந்தெடுத்த வழி ”நடுப்பக்கம்”.
சினிமா நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை நடுப்பக்கத்தில் போட்டு வாசகர்களை இழுத்தது. திருமணமாகாத இளைஞர்களை கவர்வதற்கு குறிவைத்த யுக்தியான இது இப்புத்தகத்தை போட்டி போட்டு வாங்க போதுமானதாக இருந்தது.
 
மக்களின் உணர்ச்சி தீயை போட்டி போடுவதில் ஊடகங்களின் பங்கு குறைவானதல்ல.
 
இவற்றை உரம் போட்டு வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சினிமாவையும் மறந்து விடக்கூடாது.
ஒரு காலத்தில் இந்தி படங்களை ஆபாசம், கவர்ச்சி என்று வெறுத்தொதுக்கிய ஒழுக்கமிக்க தமிழர்களின் அடுத்த தலைமுறை இதற்கு பழியாகி நிற்பது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது.
பெண்களை இன்றும் போகப்பொருட்களாக சித்தரிக்கும் கொடுமை “பம்பரம் விடுதல், ஆம்லேட் போடுதல்” என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
 

இது ஒருபுறமிக்க இதன் பரிணாம வெளிப்பாடாக, தற்போதைய இணையத்தின் பரிதாப நிலை. இதில் கண்க்கிட முடியாத நன்மைகள் பரவிக்கிடந்தாலும்  
ஒழுக்கம் தொலைத்தவர்களால் இங்கு நிகழ்த்தப்படும் ஒரு சில நிகழ்வுகள் அதில் கிடைக்கப்பெறும் அனைத்து நல்லவைகளை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. சில சமயம் இவை தனிமனித ஒழுக்கத்திற்கு விடப்படும் சவாலாக மாறுகிறது.

ரசனைக்கும்  ஒரு அளவுகோல் வேண்டும், அவற்றின் எல்லைகள் மீறப்படும் பொழுது அதைச்சார்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு அதுவே பொறுப்பாகி விடுகிறது. 

அவ்வகைளில் ஒன்று,  தற்பொழுதைய யுக்தியான பாலியல் உறுப்புக்களின்/உறவுகளின் காட்சிகளை வலையேற்றி மக்களின் ரசனையை பாழாக்கும் முயற்சி, இது இணையத்திற்கு புதிய விவகாரம் இல்லையென்றாலும் இவை எடுக்கும் அவதாரங்கள் மிகவும் புதியது மற்றும் ஆபத்தானது.


இன்று மிகப்பெரும்பான்மை இளம் வர்கத்தினரால் பயன்படுத்தப்படும்  சமூக வலைத்தளங்களின் காட்சிப்பரிமாற்றங்களில் (குறிப்பாக முகப்புத்தகம்) ஒரு கணக்கு இருந்தால் போதும் என்ற நிலையில் நமது நண்பர்களின் நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்று நம் பக்கங்களை அவை ஆக்கிரமிக்கும், அவற்றில் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளோ அல்லது அவர்களை வைத்து “Tag” செய்யப்படும் படமோ அல்லது செய்தியோ நமது பக்கங்களில் தோன்றும் அவ்வாறு செய்யப்படும் படங்களில் செய்திகளில் நாம் தணிக்கை செய்யும் வரை இவற்றிற்கு எந்த எல்லையும் கிடையாது, எது வேண்டுமானாலும் நமது பகுதியில் தோன்றலாம்.

பல நாடுகளால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று தடை செய்யப்பட்டிருக்கும் பாலுணர்வை தூண்டும் விஷயங்கள் மிக சர்வ சாதரணமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. இதன் எண்ணிக்கை தற்பொழுது அதிகமாக அதிரித்து “வாய் கூசும் பெயர்களுடைய” குழுக்களாக 18+ வரைமுறையின்றி வலம் வரத்துவங்கியுள்ளன.

”எது எக்கேடு கெட்டால் என்ன நாம் ஒழுங்காக இருந்து கொண்டால் போதும்” என்று நினைப்பவர்களை கூட இவை விட்டு வைப்பதில்லை.

இது போன்ற விஷயங்களை நாம் தேடிச்செல்லவேண்டியதில்லை, அதுவே தானாக நம்மை தேடி வரும். அந்த வகையில் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது.
 
மனதாலும், வயதாலும் பக்குவப்பட்டுவிட்ட நாம் இது போன்றவற்றை “ப்ளாக் - தடை” செய்வதன் மூலம் தடுத்துக்கொள்ளலாம். ஆனால், பக்குவப்படாத மற்றும் இதன்மீது தேட்டம் கொண்ட இளம் வயதினர், பள்ளி மாணவர்கள்?
இணையத்தில் இணைய ஒரு இணைய வசதி கொண்ட கைப்பேசி இருந்தாலே போதும் என்று சூழ்நிலைகள் எளிதாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மனிதகுலத்திற்கு ஊறு விளைவிக்கும் சக்திகள் வலுப்பெற ஆரம்பித்திருப்பது வருத்தமளிக்கும் விடயம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

அவற்றில் இருந்து இறக்கம் செய்யப்படும் தகவல்களும், படங்களும் “ப்ளூ டூத்” மூலம், இது போன்ற விஷயங்கள் சர்வசாதரணமாக பரிமாரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவை இள வயது கர்ப்பம், கருக்கலைப்பு, மன நிம்மதியின்மை போன்றவை ஏற்படக்காரணமாகின்றன.

மாணவர்களுக்கோ படிப்பின் மீதுள்ள நாட்டம் சிறிது சிறிதாக தேய்ந்து அவர்களை வேறு சில பல விஷயங்களுக்கு அடிமையாக்கி விடுகிறது.

ஒரு சில இளம்பெண்கள் மிரட்டப்பட்டும் அவர்களின் படங்கள் பதிவு செய்யப்படுகின்றன, அதோடு மட்டுமின்றி மனமுவந்து பணத்திற்க்காக காட்சியளிப்பவர்களின் படங்களும் இதில் இடம்பெருகின்றன.

ஏதேனும் பெண்ணின் மீது கோபம் இருந்தால் அவரின் பெயரில் ஒரு முகவரி உருவாக்கி அந்த பெண்ணே பதிவிடுவது போல் இவ்வகையான சமூக தீங்கை விளைவிக்கும் படங்கள் வெளியிடப்படுகின்றன.

அதுமட்டுமின்றி இவற்றின் பாதிப்பினூடாக உண்டாகும் பாலுணர்வை தூண்டும் உரையாடல்கள்/கருத்துப்பரிமாற்றங்களும் பெருகி வருகிறது, இவற்றின் தாக்கத்தின் வெளிப்பாடு ஒரு சில நிகழ்வுகளால் பதிவுலகிலும் உணரப்பட்டது.

இது போன்ற செயல்களுக்கான மூல காரணம் “மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதியை மறந்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம்" என்ற நிலைபாட்டை எடுத்ததனால்தான். இது அவனை மட்டுமின்றி சமூகத்தையும் ஆட்டிப்படைக்கிறது. இதுவே இது போன்ற ஒழுக்க சீர்கேட்டிற்கான வழியையும் திறந்து விட்டிருக்கிறது.

இவற்றை தவிர்க்க நமக்கு இருக்கும் வழிகளில் ஒன்றான “நமது பார்வைகளை பாதுகாத்துக்கொள்ளல்” மற்றும் இது போன்ற அசிங்களை காண நேரிட்டால் “ரிப்போர்ட்” என்பதை தேர்ந்தெடுத்து வலைத்தளங்களின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துதல், இது நம்மால் சமூகத்திற்கும் நமக்கும் செய்ய முடிந்த ஒரு சிறு உதவி.
 

Wednesday, November 7, 2012

8 பாடம்…


ஒரு நிறுவனத்திற்கு படிப்பில் மிகவும் தேர்ந்த இளைஞன் ஒருவன் மேலாளர் பதவிக்கான நேர்முகத்தேர்விற்கு சென்றான்.

நடந்த அனைத்து சோதனைத்தேர்விலும் வெற்றி பெற்று, நிர்வாக அதிகாரியின்  இறுதி நேர்முகத்தேர்விற்கு சென்றான், இதில் தேர்ச்சி பெற்றால்தான் வேலை நிச்சயம்.

அவனுடைய சி.வி மற்றும் சான்றிதழ்களை பார்வையிட்ட நிர்வாக அதிகாரி, ஆச்சரியம் மேலோங்க அவனிடம் “நீ கல்வி உதவித்தொகை - ஸ்காலர்ஷிப் மூலம் படித்தாயா? என்று கேட்டார்.

அவன் “இல்லை சார்” என்றான்.

“உனது தந்தையே அனைத்து செலவுகளையும், ஏற்றுக்கொண்டு உன்னை படிக்க வைத்தாரா?”

“எனது தாயார்தான் என்னை படிக்க வைத்தார், எனக்கு ஒரு வயதாக இருக்கும் பொழுதே என் தந்தை இறந்து விட்டார்”

ஆச்சரியமடைந்த அதிகாரி “உன் தாய் என்ன வேலை செய்கிறார்?”

”எனது தாய் சலவை தொழில் செய்து வருகிறார், அவர்தான் என்னை படிக்க வைத்தார், அவரின் சம்பாத்தியம் தவிர்த்து வேறு எந்த வருவாயும் எங்களுக்கு கிடையாது”

“உனது கையை காட்டு” அதிகாரி இளைஞனிடம் வேண்டினார்.

மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருந்த அவனின் கையை பார்த்து விட்டு “உனது தாயாருக்கு என்றேனும் துணி துவைப்பதற்கு நீ உதவியிருக்கிறாயா”

“இல்லை, என் தாயின் விருப்பம் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே, மேலும், அவர் என்னை விட வேகமாக துணி துவைப்பார்”

”சரி, இன்று இரவு உன் தாயாரின் கைகளை கழுவி விட்டு நாளை என்னை  வந்து சந்தி, பிறகு நாம் மற்றவை குறித்து பேசலாம்”.

எப்படியாவது இந்த வேலையை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவன் வீட்டிற்கு சென்று அவன் இரவு துணி துவைப்பதற்கு தயாராக இருந்த அம்மாவிடம் சென்று அவன் தன் விருப்பத்தை கூறி அவரின் கைகளை கழுவ துவங்கினான்,

அம்மாவிற்கு தன் மகனின் என்றுமே இல்லாத இந்த புது நடவடிக்கை மிகுந்த ஆச்சரியம் மற்றும் மற்றற்ற மகிழ்ச்சியை கொடுத்தது,

அவன் அவரின் கைகளை கழுவும்பொழுது அவரின் கைகளில் அவன் முதன் முதலாக கண்ட சுருக்கமும், காய்ப்பும் சிறு சிறு கொப்பளங்களினால் அவருக்கு உண்டான வலிகளையும் அவன் கண்டதும் அவனின் உள்ளமும், கண்களும் கண்ணீரை தாரை தாரையாக கொட்டின.

“இந்த கைதானே என்னை இவ்வளவு பெரியவனாக வளர்த்தியது, இந்த கைதானே இத்தனை நாள் எனக்கு சோறு போட்டது, இந்த கைதானே என்னை படித்து பட்டம் பெற வைத்தது”

”எனது படிப்பிற்கான செலவுகள் அனைத்தையும் இந்த கையல்லவா இத்தனை நாள் கொடுத்துக்கொண்டிருந்தது”

நிர்வாக அதிகாரி கேட்ட கேள்வியின் அர்த்தம் அவனுக்கு இப்பொழுது புரிந்தது. அவனின் அழுகை நிற்கவில்லை.

அன்று இரவு தன் தாயிற்காக அனைத்து துணிகளையும் அவன் துவைத்தான், தன் தாயிற்காக அவனின் கண்கள் முதன்முதலில் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது.

இரவு வெகு நேரம் வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், “தன் தாய் கடந்து வந்த பாதைகள், சோதனைகள், அவள் பட்ட வேதனைகளை அனைத்தையும் அவனின் உள்ளம் கிரகித்துக்கொண்டது”

இத்தனை காலம் தனக்காக இவ்வளவு வேதனைகளை தாங்கிய தன் தாயிற்காகவாவது சாதிக்க வேண்டும் என்று அவன் மனதில் புது உத்வேகம் பிறந்தது”.

நேற்றைய இரவுச்சம்பவம் அவன் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினால், காலை அலுவலகத்திற்கு மீண்டும் தேர்விற்காக வந்த அவனின் கண்களில் உள்ள கண்ணீரை கண்ட அதிகாரி அவனிடம் “நேற்று நீ வீட்டில் என்ன செய்தாய், அதன் மூலம் நீ பெற்ற படிப்பினை என்ன?”

”என் தாயின் கைகளை கழுவி, அனைத்து துணிகளையும் நானே துவைத்தேன்”

“உனது உணர்வு எவ்வாறிருந்தது?”

1)      உழைப்பின் அருமை அதன் அர்த்தம் புரிந்தது என் தாயின் உழைப்பு இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு முன்னுக்கு வந்திருக்க முடியாது.

2)      நேற்று எனது தாயார் தினசரி செய்யும் வேலையை செய்தபோதுதான் எனக்கு வாழ்க்கையை வாழ்வதும் ஒரு வேலையை செய்வதும் எவ்வளவு கடினம் என்பது புரிந்தது.

3)      குடும்ப பந்தத்தின் அருமையையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

”ஒரு மேளாலருக்கான தகுதியாக நான் நிர்ணயித்தது இதைத்தான், அடுத்தவரின் உணர்வுகளை மதித்து புரிந்து வேலை செய்பவர்தான் எனக்கு தேவை, அதை புரியாமல் வேலை செய்ய ஒரு இயந்திரம் போதும்”.

அந்நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த இளைஞன், தான் கற்றுக்கொண்ட உழைப்பின் அருமை, அடுத்தவர்களின்
உணவுகளை புரிந்து அவர்களின் கடின உழைப்பை ஊக்கப்படுத்துதல் மற்றும் டீம் ஒர்க் போன்ற காரணிகளை செயல்படுத்தியதால், அந்த நிதியாண்டில் அந்நிறுவனம் நல்ல இலாபத்தை அடைந்தது.

Friday, May 4, 2012

5 சும்மா தாமாசு...




முகப்புத்தகத்தில் (FB) நண்பர் ஒருவர் பகிர்ந்தது, எனக்கு பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடிக்கலாம்.
ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

...

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! 


மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான். 

 

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.  
*************************************************************************************

 





கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!


இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! 

*************************************************************************************





கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!


*************************************************************************************





கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! 

**************************************************************************************



கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!


*************************************************************************************







கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!


*************************************************************************************







கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!


*************************************************************************************







கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...

***********************************************************************************

டிஸ்கி: இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே பகிர்ந்தது, இதைப் படித்து விட்டு சிரிப்பு வரலைன்னா யாரும் சீரியஸ் ஆகி விட வேண்டாம். ப்ளீஸ்.

பட உதவி:  http://www.fotosearch.com/

Saturday, March 31, 2012

18 "பார்வை...." கடந்து வந்த பாதைகளில்

நாம் பொழுது போகவில்லை என்று யாருடனாவது ஏதையாவது உரையாடிக் கொண்டிருக்கும் போது நம் பேச்சு நம்மையும் அறியாமல் எங்காவது இழுத்துச் சென்றுவிடும், ஒரு சிலவேளைகளில் அது நமக்கு படிப்பினையாகவும் அமைந்து விடும்.
அது போன்ற ஒரு உரையாடலின் போது ஒரு நாத்திக நண்பரிடம் இருந்து நான் முஸ்லிம் என்பதால் கேட்கப்பட்ட கேள்வி "உங்கள் இறைவன் கருணையாளனென்றால் ஏன் கண் இல்லாதவர்களைப் படைத்து இன்னல்களுக்கு ஆளாக்கினான், அப்படியென்றால் உங்கள் இறைவன் கருணையில்லாதவன் தானே?". எனக்கு வயது 19 இருக்கும், அப்பொழுது இந்தக் கேள்விக்கு சத்தியமாக விடை தெரியவில்லை. காரணம் இஸ்லாமிய அறிவு இல்லாததுதான். மேலும், இந்தக் கேள்வியைக் கேட்டு தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்ட அந்த நாத்திகரிடம் "இதெல்லாம் கடவுள் செயல்" என்று ஒரு ரெடிமேட் பதிலைச் சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை. "சரி விடுங்க" கடவுள் இருந்தா இருக்கட்டும் இல்லைன்னா போகட்டும் என்று அவர் மனம் குளிரும் விதமாக பதிலைச் சொன்னதும் என்னை தோற்கடித்து விட்டதில் அவருக்கு அப்படி ஒரு திருப்தி.

கண் இல்லாதவர்களைக் காணும் பொழுது அவர்கள் மீது, கண் இருக்கும் நமக்கு ஒருவித இரக்கம் ஏற்ப்படத்தான் செய்யும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இறைவன் ஏதோ அவர்களைக் கண் இல்லாதவர்களாக படைத்து விட்டான் அவன் அவர்களைப் பாதுகாப்பான் என்றும்,

நாத்திகர்களுக்கு, இயற்கையின் ஒரு சில தோல்வி முயற்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர்களுக்குள்ளாகவே சமாதனமாகி விடுவதும் உண்டு.

ஆனால், நமக்குக் கண் இருப்பதாலும் அவர்களுக்கு கண் இல்லாததாலும் என்ன வித்தியாசம், அவர்களிடமிருந்து நாம் எவ்விதத்தில் வேறுபடுகிறோம்? அவர்கள் நம்மிலிருந்து எவ்விதம் வேறுபடுகின்றனர்? என்பதை என்றேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?.

அப்படி சிந்திப்போமேயானால்,

"கண் இல்லாத அவர்கள்தான் நம்மைவிட எத்தனை மடங்கு பாக்கியசாலிகள்! நல்லோர்கள்!" என்ற முடிவுக்கு வர நீண்ட அவகாசம் தேவையில்லை.

ஒளிவு மறைவு இல்லாத வாழ்கை என்ற ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம், அதை நம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம். கண்ணில்லாதவர்களைப் பொறுத்தவரை ஒளிவும் கிடையாது, மறைவும் கிடையாது, அதன் காரணமாகவோ என்னவோ மிகப் பெரும்பான்மையான கண்ணில்லாதவர்களின் இதயம் ஒளி உள்ள வெண்மை நிறமாக ஒளிர்கிறது.

பலகீனத்தை தங்களின் செயல்கள் மூலம் இவர்கள் தினசரி வெல்கிறார்கள்!,

நாம் வாழ்வின் நொடிப் பொழுதுகளில் எத்தனையோ காட்சிகளைக் காண்கின்றோம், ஆனால் அவை அனத்தையும் மனது என்ன தேக்கி வைத்துக் கொள்ளவா செய்கிறது?.

அப்படி ஒரு காட்சிதான் நான் எனது இரயில் பயணத்தில் நான் கண்டது, அது எனது 19ஆம் வயதில் நாத்திகரால் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக 25ஆம் வயதில்,

இரயில் "ரேஷன் கவர்", "ரிமோட் கவர்", "சீசன் டிக்கட் கவர்" etc. என்று பலவித சாமன்களை சுமந்து விற்றுக் கொண்டு வந்தார் ஒரு கண் பார்வை இல்லாதவர்.

ஒரு சிலர் சாமான்கள் வாங்கினர், நானும் சிசன் டிக்கட் கவர், பேனா என்று ஒரு சில 20 ரூபாய் மதிப்புள்ள சாமான்களை வாங்கினேன், அவரிடம் 50 ரூபாய் கொடுத்தேன் அவர் மீதம் 30 ரூபாயை, கரெக்ட்டாக ஒரு 20 ரூபாய் தாளயும் ஒரு 10 ரூபாய் தாளையும் அவ்வளவு லாவகமாக தடவி கொடுத்து, "சார் சேஞ் கரெக்ட்டா இருக்கா, பாத்துங்க சார், ரெம்ப தாங்ஸ் சார். ரிமோட் கவர், ரேஷன் கவர், பேனா" என்று கூவிக் கொண்டே, தனது வியாபரத்தை ஊன்று கோலின் உதவியுடன் தொடர்ந்தார்.

இரயிலில் பயணம் செய்வோர் இதை ஏதேனும் ஒரு சமயத்தில் கண்டிருக்கலாம்.

அவர்தான் என் கண் பார்வையில் இருந்து அகண்டாரேயொழிய, அவரின் நேர்மை என்னுள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது!, காரணம் ஏமாற்றுவதற்கு அவரிடம் காரணிகள் இருந்தும் தன் விடா முயற்சியின் பலனாக ரூபாய் தாள்களை தடவி அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கற்று, பொருட்களையும் விற்பனையும் செய்து பிழைக்கிறார் என்றால் அவருக்கு நம் மனதில் இடம் கொடுக்காமல் இருக்கலாமா?.

மேலும் என்னுள் இச்சம்பவம் என்னை நானே எடைபோட்டுக் கொள்ளவும் உதவியது.,
என்னிடம் ஒரு நூறு ரூபாயையோ அல்லது அதையும்விட குறைவான பணத்தையோ கொடுத்தால் என்னால் நிச்சயமாக தடவிப் பார்த்து எவ்வளவு என்று கூற இயலாது, "முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்" என்பதுதான் எத்துனை உண்மை!, அதுவும்! தனது உடலில் ஊனம் இருந்தும் தனது முயற்சியை தனது நேர்மைக்கு பறைசாற்றும் செயல்களைச் செய்யும் இவர்களிடம் இருந்து பெறும் படிப்பினைதான் என்ன??.

கிண்டி இரயில்வே ஸ்டேஷனுக்கு தினசரி வரும் கணவன் மனைவி!, கணவனுக்கு ஊன்றுகோல் துணை என்றால் மனைவிக்கு கணவனின் தோள் துணை, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்! ஆனால் கண் இல்லாத காதல் கடைசிவரை நிலைக்கும் என்பதற்கு இவர்களின் மகிழ்ச்சி ஒரு ஆதாரம், அதென்னவோ தெரியவில்லை கண்பார்வையற்றவர்களின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது? ஆச்சரியம்தான்!.

இவர்களைப் பார்த்து கண் இல்லாதவர்கள் என்று பரிதாபப் படுகிறோம்??!!, இறைவன் கண் இல்லாதவர்களை "இருட்டை இரசிப்பதற்க்காவா" படைத்தான் என்று இறைவன் மீது கோபம் கொள்கிறோம்?!!, பாவம் நாம்!, பரிதாபப்படுவதற்கும், கோபப்படுவதற்கும் உரிய தகுதியில் நாம் இருக்கிறோமா?,

என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா? சகோதர சகோதரிகளே!.

நம்மை உயிர்களிடத்தில் உயர்ந்தோராக்குவது நமது எண்ணமும் செயலுமா? அல்லது நமது உடல் உறுப்புக்களா?.


இதற்கு ஆணி அறைந்தாற் போல் வேறொரு சம்பவம்...

இரயில் பயணத்தில் பிறிதொரு சமயம் நான் கண்ட காட்சி என்னுள் வேதனையை வாரியிறைத்து விட்டுச் சென்றது வாழ்விற்கு ஒரு படிப்பினையாய்!.

ஏனெனில், இவர்களுக்கோ கண்கள் இரண்டும் நன்றாக தெரிந்திருந்தது?!.

தங்கள் இயலாமையை பூச்சூடி, பொட்டுவைத்து, அலங்கரித்து உலகிற்கு காண்பிப்போர், பலகீனத்தை வெல்லத் துணிவின்றி வாழ்வைத் தொலைத்தவர்கள், ஏனோ! தெரியவில்லை, இவர்கள் வருவதைக் கண்டாலே அனைவர் முகமும் மரண பயத்தில் வெலவெலக்கும்.

யார் இவர்கள்?

நான்கைந்து பேர்கள் கொண்ட குழுவாக வந்த இவர்கள் "திருநங்கை காசு குடு அண்ணா" என்று ஒவ்வொருவரிடமும் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர், ஒரு சிலர் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என்று சில்லரைகள்ப் போட்டுவிட்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர், ஒரு சிலர் சில்லரை இல்லை என்று துரத்தாத குறையாக விரட்டினர், இருந்தும் ஒரு சில இளைஞர்களிடம் பிடிவாதம் பிடித்து இருந்ததை வாங்கமல் விடவில்லை.

நான் நண்பர்கள் நான்கைந்துபேருடன் பயணித்துக் கொண்டிருந்தேன், எங்கள் முறை வந்தது, எங்கள் யாரிடமும் சில்லறை இல்லை, பிடிவாதம் பிடித்துக் கொண்டு பணம் கொடுத்தால்தான் தான் இடத்தைவிட்டு நகர்வோம் என்ற மனநிலையில் அவர்கள் வேறுவிதமான தொல்லை கொடுக்க, நான் "ஏம்பா சில்லறை இல்லன்னுதான் சொல்றோம்ல" என்று கூற, "எவ்வளவுக்கு சில்லறை வேணும் நாங்க தாறோம்" என்று அவர்கள் ஒரு வித கவர்ச்சி நடையில் கூற "என்னடா இது தொல்லையா போச்சு" என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன், அவர் "இதோ மாத்திட்டு வந்துடுறேன்" என்று போனவர் போனவர்தான் திரும்பவில்லை. இறுதியில் நண்பர்களின் நகைப்பிற்கு நான் ஆளானேன். தொலைந்து போனது ஐம்பது ரூபாய்தான் ஆனால் அது என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட தவறவில்லை.

என்னுடன் படித்த சக மாணவன் ஒருவனுக்கும், இதே போல் நடையில் ஒருவித மாற்றமும், பேச்சில் ஒருவிதமாக இழுத்துப் பேசும் நடையும் இருந்தது, அறியாத வயதில் நண்பர்கள் கேலி செய்வர், இதனால் மனம் நொந்தாலும், விளையாட்டு, ஆண்களுடன் அதிகமாக பழகுதல் போன்ற முயற்ச்சிகளினால் அந்த மாணவனுள் ஒருவித மாற்றம் வந்து அவன் ஒரு ஆணாகவே தன்னை நிலைப்படுத்திக் கொண்டான், ஓவியம் வரைவதில் எங்கள் பள்ளியிலேயே அவன் தான் ஃப(ர்)ஸ்ட்.

என்ன காரணத்திற்க்காக இவர்களுள் இந்த மாற்றம் நிகழவில்லை?, இவர்கள் பெண்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்ளட்டும், ஆனால் ஏன் இவர்கள் பெண்கள் சதாரணமாக பணிபுரியும் சத்துணவுக் கூடத்திலோ, ஒரு ஏற்றுமதி துணிகள் தைக்கும் நிறுவனத்திலோ அல்லது பெண்கள் பணிபுரியத்தகுந்த தொழிற்சாலைகளிலோ பணிபுரிவதில்லை?,.

ஆக! கண்கள் இரண்டும் இல்லாதிருந்த ஒரு பார்வையற்றவரிடம் இருந்த நேர்மை!, இரண்டு கண்களும் இருந்து தங்களின் செயல்களினால் குருடாகிப் போனவர்களிடம் காணவில்லையே! இப்பொழுது யார் உயர்ந்தவர்?.

இது மட்டுமா!,

ஒரு வயிற்றில் கருவாகி உருவாகி பிறந்த, சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமை?, அற்ப சொத்திற்க்காக நீதிமன்ற வாசல் ஏறி இறங்கும் அவலம்?!.

எத்தனையோ இராஜதி இராஜாக்கள், மன்னாதி மன்னர்கள் எல்லாம் சொத்து சுகத்துடன் வாழ்ந்தனர் அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? யார் சிந்திப்பது?, சிந்திப்பதற்கு நேரமும் உண்டோ? இவ்வியந்திர உலகில்!.

கள்ளம், கபடம், வஞ்சம், வெட்டு, குத்து etc...

நேர்மையற்றவர்களுக்கு முன், நேர்மையின் மூலம் உயர்ந்து நிற்கும் இது போன்ற கண்பார்வையற்றவர்களைக் குறித்துத் தாழ்த்திச் சிந்திக்க நமக்கு உள்ள அருகதை என்ன? சிந்திக்க வேண்டாமா?.

இறைவன் குர்ஆனில் மனிதனைப் பற்றிக் குறிப்பிடுகையில்..

95.4.மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்
95.5 பின்னர் அவனை(அவன் செயல்களின் காரணமாக) இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.

நாம் செய்யும் செயல்கள்தான் நம் மதிப்பை இறைவனிடத்தில் உயர்த்துமேயொழிய நமது உருவ அமைப்பு கிடையாது என்பதை இவ்விறை வசனங்களின் மூலம் எளிதில் விளங்கலாம்.

40.58. குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்த வரும் (சமமாக மாட்டார்கள்). குறைவாகவே நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்.

ஆதம் (அலை) அவர்களின் மார்க்கம் அனைத்திலும், இறந்ததற்குப் பின்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள் என்ற ஒன்று உண்டு, அன்று அனைவரும் அவர் அவர் செய்த செயல்களுக்கு பதிலளிக்க வேண்டும், இதில் வெற்றி பெறுபவர் யாரோ அவரே உண்மையான வெற்றியாளர்!.

மேலே நாம் கண்ட விஷயங்களில் இருந்து இந்தப் பரிட்சையில் எளிதில் வெற்றி பெருபவர் யாராக இருக்க முடியும்?.


அன்றைய தினம் அடுத்தவரின் (செயல்களின்) சுமைகளை வேறொருவர் சுமக்க மாட்டார்கள், மேலும், அடுத்தவர் செய்து கொண்டிருந்தது பற்றி நாம் விசாரிக்கப்படவும் மாட்டோம். எனவே இறைநம்பிக்கை கொண்டு நல்லது செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ள வேண்டும், நன்மை செய்ய பிறரைத் தூண்ட வேண்டும் தீமைகளின் அருகில் கூடச் செல்லக்கூடாது!. என்று குர் ஆன் கட்டளை இடுகிறது.

நண்பர்களே! இறைவன் இல்லை என்பதற்கு எவ்வாறு "கண்களை" அளவுகோலாகக் கொள்வீர்கள்?.

ஒருவர் ஒரு மதத்தில் சேர்ந்துவிட்டதனாலோ, அல்லது ஒரு மதத்தில் பிறந்து விட்டதனாலோ அவர் உயர்வடைந்து விட முடியாது!.

அவர் நடக்கும் நல்வழியே அவரை உயர்ந்தவராக்கும்!.

பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவோருக்கும் தகுந்த படிப்பினையாக இருக்கின்றனர், இந்தக் கண்பார்வையற்றவர்கள் என்றால் மிகையாகது!.

உண்மையான இறைவனை அறிந்து கொள்ள கண்பார்வையற்றோர் நமக்கோர் வழிகாட்டி!.

Tuesday, March 13, 2012

6 "குழல் இனிது, யாழ் இனிது" ???

எங்கள் அலுவலகத்திற்கு புதிதாக ஒரு நேபாளத்தைச் சேர்ந்த அலுவலகப் (பையன்) ஆள் (40 வயதை தொட்டு விட்டவர்) சிபாரிசு மூலம் பதவியேற்று (அதாவது முன்பு Asst. Carpenter - உதவி தச்சாளர்) தனது வேலையை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். வந்த புதிதில் அவருக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்திருக்க வேண்டும். காரணம் சைட்டில் (Work Site) வேலை பார்ப்பதற்கும், அலுவலகத்தில் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

பல நாட்டினர் வேலை செய்யும் சூழலில் ஆங்கிலம் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம். இவருக்கோ நேபாளி மற்றும் இந்தி மட்டுமே தெரியும்.

இவரின் அவஸ்தை, இராஜஸ்தானில் மொழி அறியாமல் விழி பிதுங்கிய என் அனுபவத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது,

வெறும் தழிழை மட்டுமே அறிந்திருந்த நான் இந்தி தெரியாமல் ஒரு ஊமையாக நின்ற பொழுது, மொழியின் அருமை எனக்கு விளங்கியது.

நான் சென்றிந்ததோ ஒரு குக் கிராமம், நமக்குத்தான் டீ குடிக்கவில்லையென்றால் மண்டையே வெடித்து விடுமே!, ரூமிலிருந்து வெளியில் இறங்கி கடைத் தெருவுக்குச் சென்றேன், எங்கு தேடினும் தேனீர் விடுதி கண்ணில் படவில்லை, யாரிடமாவது கேட்கலாம் என்றால் எப்படி கேட்பது?,

Is there any teashop nearby?. என்று ஒருவரிடம் கேட்க, என்னை ஒரு முறைப்பு முறைத்து விட்டு "ஓ! மதராஸி.., ஆங்கிரேஸி இதர் நை சல்த்தாஹே பையா, பெஹ்லே ஹிந்தி ஸீக்கோ" என்று புரியாத பாஷையில் ஏதோ சொல்ல நான் மெல்ல நடையைக் கட்டினேன், அங்கு கண்டவர்களின் தலைப்பாகை மற்றும் உடைகளை வைத்து அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

பிறகு ஒரு பெட்டிக்கடையில் சென்று சைகை மூலம் "சாய் சாய்" என்றதும் அவர் சுத்த ஹிந்தியில், அவரின் கையை அசைத்து வழிகாட்டினார், அவரின் கை அசைவுகளை வைத்து டீக்கடையை கண்டு பிடித்தேன், அங்கு சென்று சைகை மூலம் ஒன்று என்று காட்டினேன், கடைகாரர் புன்முறுவலுடன் ஒரு கட்டிங்(டீயை கட்டிங் என்றுதான் அவர்கள் அழைக்கிறார்கள்) கொடுத்தார்.
டீ குடித்தவுடன் நிம்மதி என்றாலும், பாஷை தெரியாமல் இங்கு எப்படி காலம் தள்ளுவது மனதுக்குள் ஒருவித அச்சம் படர, ஊமை பாஷையுடன் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், வேலைக்காக சென்றிருந்த நான் பாஷை மற்றும் உணவின் காரணமாக ஒரு மாதத்திலேயே இடத்தைக் காலி செய்யவேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளானேன்.

அது முதல், பாஷை என்பது இறைவன் கொடுத்த மாபெரும் பேறு (அருட்கொடை) என்பது விளங்கியது. பல மொழி பேசக் கூடியவர்கள் வாழும் இங்கு (சவுதியில்) நான் கண்ட காட்சிகள் என் நம்பிக்கையை இன்னும் வழுப்படுத்தியது.

மூன்று வயது நிரம்பிய "பிலிப்பைன்ஸ்" தம்பதியரின் குழந்தை அதன் தாய்மொழியில் சரளமாக பேசியதைக்கண்டது,

ஆங்கிலத்தை நாக்கைச் சுழற்றி சுழற்றிப் பேசிய அமெரிக்கக் குழந்தை, அரபியைச் சரளமாகப் பேசிய அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தை,

இந்தியை சரளமாக பேசிய இந்தித் தம்பதியரின் குழந்தை, தெலுங்குக் குழந்தை, மலையாளக் குழந்தை, etc.. etc.

இக்குழந்தைகளைக் காணும் பொழுது என்னுள் எழும் ஆச்சரியங்களுக்கு விடையில்லை "இவர்கள் அனைவரும் எவ்வாறு, டிக்ஷ்னரி புரட்டாமல் சரளமாக பேசுகின்றனர்?".

"குழல் இனிது யாழ் இனிது"

நிச்சயம் மூன்று வயதுக் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் சரளமாக பேசும் பொழுது குழல் யாழ் எவ்வாறு இனிக்க முடியும்.

அன்னிய மொழி பேசும் குழந்தைகளுக்கு முன் அம் மொழி அறியா யாவரும் ஊமைதான்.

இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள நம் முன்னே கொட்டிக்கிடக்கும் காட்சிகள் ஏராளம், அதிலும் மொழி இன்றியமையாதது.

மற்ற ஜீவராசிகளுகுக் கிடைக்காத மாபெரும் பொக்கிஷமான மொழி மனிதனுக்கு கிடைத்திருக்கிறது, மனிதனின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணிகளில் மொழியும் ஒன்று.

Monday, March 5, 2012

0 எங்கே செல்கிறோம் நாம்..

ஒழுக்கம், பெரியோரை மதிக்கும் பண்பு, நன்னடத்தை இவையெல்லாம் சிறிது சிறிதாக சமூகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது.

பெரியோர்களின் அறிவுரை நமது இளைய சமுதாயத்திற்கு கடும் நஞ்சாகி கசக்கிறது.

நானே ராஜா நானே மந்திரி என்னும் மனப்போக்கு தற்பொழுது இளைய தலைமுறையினரை ஆட்டுவிக்கிறது!

சென்னையில் பஸ் கொஞ்சம் கூட்டமாகவும் அதில் இரண்டு மூன்று வயதுப் பெண்கள் இருந்துவிட்டால் போதும் இளைஞர்கள் ஒரு பஸ் நிறுத்தத்திலிருந்து அடுத்த பஸ் நிருத்தம் வரை ஓடிடிடிடிடி வந்து ஏறாமல் ஏற வேண்டும் என்பது இளைஞர்கள் தங்களுக்குள்ளாகவே எழுதி வைத்திக் கொண்டிருக்கும் விதி.

இதை யாரவது பெரியவர் "ஏம்பா உள்ளேதான் இவ்வளவு இடமிருக்கே, உள்ளே வாங்களேன்" கண்டித்தால் போதும்,

"யோவ் பெருசு வேலையைப் பாப்பியா? சும்மா அட்வைஸ் பண்ண வந்துட்டே" என்று மரியாதையாக் கூறுவதை காணமுடியும்.

இளம் கன்று பயம் அறியாதுதானே.

ஆனால், ஏதேனும் விபத்து நேர்ந்து கை கால் இழந்தால், பிறகு ஆயுளுக்கும் அதன் வடு போகாது என்பது பாவம் அவர்களுக்கு விளங்காத ஒன்று. அவர்கள் இம்மண்ணில் வாழும் காலமெல்லாம் அவர்கள் செய்த காரியத்தை எண்ணி அது வருந்த வைத்து விடும் என்பது மட்டும் மெய்.


9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒரு ஆசிரியரைக் கொலை செய்து விட்டு, ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்துதான் நான் அதுபோல் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியரையே மாணவன் கொல்லத் துணிகிறான் என்றால் அவன் தன் சிந்தையை எந்த அளவுக்கு கொடூரமாக தீட்டியிருக்கிறான் என்பது தெளிவாகும். அதற்கு திரைப்படமும் துணை போயிருக்கிறது.

எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சார சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு அது தூண்டியுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

சினிமாக்கள் பெண்களை இன்னும் போகப் பொருள் என்னும் அந்தஸ்திலேயே வைத்துள்ளது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

சின்னத்திரையோ வீட்டில் உள்ள பெண்களையெல்லாம் முட்டாளாக்கி அவர்களின் மனதில் விஷ விதையை நடுகிறது.

குடும்பத்தில் எவ்வாறு சண்டையிடலாம் என்பதை, தங்களுக்கு இதை விட்டால் வேறு கதியில்லை என்று இருக்கும் பெண்களுக்கு மிக நேர்த்தியாக சின்னத்திரை மெகா.. சிரியல்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறது.

சண்டை அதிகரித்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவலம் இனி அதிகரிக்கலாம். ஒரு காலத்தில் முதியோர் இல்லப் பற்றாக்குறை வந்தாலும் வரலாம்?

நமது பொன்னான நேரத்தை வாங்கிக் கொண்டு மிடீயாக்கள் நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றன பார்த்தீர்களா?.


காதல், காமம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் என கருத்துச் சுதந்திரப் போர்வையினூடே சமூகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை மிக எளிதாக இவற்றை பந்தி வைக்கின்றன.

இதையே கண்களும் தேடித் தேடி அலைகிறது, டிவி ரிமோட் பட்டனும் தேய்கிறது. இதன் விளைவு என்னவாகும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பஸ்ஸில் பெண்களின் பகுதி ஆண்களின் பகுதி என்று வேலி போட்டுத் தடுக்க வேண்டிய காலத்தின் கோலத்தை பார்த்து நிலமையின் விபரீதத்தை விளங்கிக் கொள்ளலாம்..

பெற்றோர்களை நான் வேண்டுவது என்ன வென்றால் தயவு செய்து குழந்தைகளை டிவி சினிமா போன்ற கன்றாவிகளை பார்க்க விடாதீர்கள், நீங்களும் முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளின் மனதில், இறைவன் நம்மை எப்போதும் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்னும் எண்ணத்தை விதையுங்கள், தாங்களும் இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள், இதன் மூலமே நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

Thursday, February 9, 2012

2 கோழிக் குஞ்சு - ஒரு பாடம்....

பள்ளிப் பருவம்..


கடை வீதி, கீச் கீச் கீச் என்று சத்தம்,
stock photo : hens on a white background

 
"கோழிக்குஞ்சு விக்கிறவன் வந்துட்டான்மா, இனி இதுக தொல்ல தாங்க முடியாது" வயதான பாட்டி ஒருவர் தெருவெங்கும் கூவிக் கொண்டிருந்தார்.


வீட்டில் நான் சேர்த்து வைத்திருந்த 5 ரூபாயை ஓடிச்சென்று எடுத்து கடைத் தெருவை நோக்கி ஓடினேன்.


வட்டக் கூடையில் கோழிக் குஞ்சுகளை வைத்து ஒரு ருபாய்க்கு ஒன்று, என்று நரை விழுந்த வயசான ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார், பச்சை, மஞ்சள், சிகப்பு என்று வண்ணம் தீட்டப்பட்டு அந்தக் கூடைக்குள் குஞ்சுகள் கீச்ச் கீச்ச் என்று கத்திக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிரு ந்தது என்ன ஒரு அருமையான காட்சி!.


எங்கள் ஊரில் இதை (கரென்டுக் குஞ்சு) என்றுதான் அழைப்போம்.


5 கலர்களில் குஞ்சுகளை வாங்கி  கொண்டு வீட்டிற்கு வந்து, பிறகு அவைகளுக்கு வீடு வேண்டுமே, உடனடியாக ஒரு அட்டைப் பெட்டியில் வாசல், ஜன்னல் எல்லாம் வைத்து வீடும் தாயார் செய்து,  ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் கொஞ்சம் புல் இட்டு, அட்டைப் பெட்டிக்குள் சிறிது மண் தூவி, அவைகளின் உணவுக்கும், உறக்கத்திற்கும் வழி செய்தவுடன் அப்படி ஒரு நிம்மதிப் பெருமூச்சு.



அப்பருவத்தில் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்படி ஒரு இன்பம்.


நாட்கள் மெல்ல நகர நகர அவையும் சிறிய அளவில் பெரிதாகிக் கொண்டிருந்தன, அதில் ஒரு குஞ்சுக்கு மட்டும் கால் ஊனம், மற்றக் குஞ்சுகள் அனைத்தும் அங்கும் இங்கும் ஓட்டி விளையாடுகையில், தெத்தி தெத்தி ஒரு குஞ்சு மட்டும் பரிதவிப்பது பார்க்கவே பாவமாக இருக்கும்.



இதன் காரணமாகவோ என்னவோ அந்தக் குஞ்சின் மீது மட்டும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அலாதி பிரியம், தினசரி மஞ்சளை அம்மியில் வைத்து தேய்த்து அக்குஞ்சிற்கு தடவி விடுவேன், கால் குணமாகும் என்ற நம்பிக்கையில்.


உறவினரின் திருமணத்திற்க்காக வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றிருந்தனர், நானும் என் தகப்பானுரும் வீட்டில் இருந்தோம், பரிட்சைக்காக படித்து விட்டு புத்தகத்துடன் உறங்கி விட்டேன்.


தீடீரென நடு ராத்திரியில் வீட்டில் விளக்கு எரிந்தது, விளக்கு வெளிச்சம்  பட்டவுடன் நான் கண் விழித்துப் பார்த்தேன், எனது தந்தை கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.


"என்ன வாப்பா?".


"பூனை கோழி குஞ்சை புடுச்சுட்டுப் போயிருச்சுடா"


அதிர்ச்சி,


"எத்தனை வாப்பா?"


"ஒரு குஞ்ச புடிச்சுருச்சுடா, நான் சத்தம் கேட்டு எழுந்திருச்சேன், அதுக்குள்ள அது கவ்விக்கிட்டுப் போயிருச்சுடா"

அந்தப் பூனை சென்ற வழியெங்கும் கோழிச் சிறகுகள் சிதறிக்கிடந்தன.


உள்ளே எட்டிப்பார்த்தேன், எனக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது, ஏனெனில் பூனை கவ்விக் கொண்டு போனது, கால் ஊனமான குஞ்சை, அன்று இரவு மட்டுமல்ல நிறையை இரவுகள் அக்குஞ்சை நினைத்து உரங்காமல் சென்றதுண்டு.

அந்தக் குஞ்சு இல்லாமல் எனக்கு, வீடு எதையோ இழந்தது போல காட்சி தந்தது,

மீதமிருந்த நான்கு குஞ்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக சிறிது கால இடைவெளிக்குள் இறந்து போயின.


ஏதோ ஒரு காரணத்தினால் இப்புவியில் பிறந்து விட்ட, நாம் அனைவருமே என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் எனும் உண்மை,   சிறு பிள்ளையாகிய எனக்கு அப்போது விளங்கவில்லை.


புகைப்பட உதவி: www.shutterstock.com

Sunday, January 1, 2012

9 இஸ்லாமியனே! ஏனிந்த கவலை உனக்கு?

இழி பிறவி என்று ஏசப்படுகிறாயா? அல்லது
தாழ்வு மனப்பான்மையுடையவன் என்று தூற்றப்படுகிறாயா?
உண்மை அறியாதவனா, நீ? அல்லது இஸ்லாம் உனக்கு வழங்கிய வணக்கங்களினால் நீ அடையும் நன்மைகளைத் தெரியாதவனா?

ஓரிறையை வணங்கு என்றதற்க்காக நெருப்பைப் பரிசாக்கிய கூட்டம் பற்றித் தெரியாதா?  அல்லது சிலுவையில் அறைவதற்கு எத்தனித்த கூட்டம் பற்றி அறியாதா?

கல்லடி கொடுத்த கயவர்களைப் பற்றி உனக்கு நான் சொல்லித்தான் விளங்க வேண்டுமா? என்ன?

இவர்கள் செய்த பாவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றதுதானே?

என்ன நடந்து விட்டது என்று இடிந்து போய் இருக்கிறாய்?

ஒரு குடையின் கீழ் ஏன் இருக்கிறாய்? எங்களைப் போல் பிரிவினை பேசி, அடித்துக் கொண்டு சாகு  என்பவர்களின் வார்த்தை கேட்டா ?

அல்லது

ஜாதி, மொழி, இன, இன்ன பிற  வெறி கொண்டு அலையும் மனிதப் பிறப்பின் மகத்துவமறியா வாய்ச் சொல் மாவீரர்களின்(???) பிதற்றல்கள் கேட்டா?

ஆபாசமே எங்கள் மூச்சு, வீண் வெட்டித்தனங்களே எங்கள் பேச்சு என்பவர்களிடமா நீ நியாத்தை எதிர் பார்க்கிறாய்?

பெண்கள் எங்களின் போகப் பொருள்களே, என்று அவர்களின் முதுகுகளைக் காட்டி மோகம் தீர்க்கும் அறிவீனர்களிடம் என்ன நியாயம் நீ எதிர்ப்பார்கிறாய் என்று புரியவில்லை?

குமரிகளை உடைகளுக்குள் மறைத்து வைக்கிறாய், ஒகே, ஆனால் கிழவிகளை ஏன் மறைத்து வைக்கிறாய்? அடப்பாவிகளா! ஒரு வயது (?) குழந்தைகளையே விட்டு வைப்பதில்லையே காமம்.

விட்டு விடு, இதுபோன்ற விஷ(ய)ங்களுக்கு விடை சொல்லப் போனால் நீ தன்னைத் தானே தாழ்திக் கொண்டவனாக வர்ணிக்கப்படுவாய்.

விட்டு விடு,

பழுத்த மரம் கல்லடி படும் என்பது முன்னோர்களின் வாக்கு.