தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Tuesday, March 13, 2012

6 "குழல் இனிது, யாழ் இனிது" ???

எங்கள் அலுவலகத்திற்கு புதிதாக ஒரு நேபாளத்தைச் சேர்ந்த அலுவலகப் (பையன்) ஆள் (40 வயதை தொட்டு விட்டவர்) சிபாரிசு மூலம் பதவியேற்று (அதாவது முன்பு Asst. Carpenter - உதவி தச்சாளர்) தனது வேலையை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். வந்த புதிதில் அவருக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்திருக்க வேண்டும். காரணம் சைட்டில் (Work Site) வேலை பார்ப்பதற்கும், அலுவலகத்தில் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

பல நாட்டினர் வேலை செய்யும் சூழலில் ஆங்கிலம் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம். இவருக்கோ நேபாளி மற்றும் இந்தி மட்டுமே தெரியும்.

இவரின் அவஸ்தை, இராஜஸ்தானில் மொழி அறியாமல் விழி பிதுங்கிய என் அனுபவத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது,

வெறும் தழிழை மட்டுமே அறிந்திருந்த நான் இந்தி தெரியாமல் ஒரு ஊமையாக நின்ற பொழுது, மொழியின் அருமை எனக்கு விளங்கியது.

நான் சென்றிந்ததோ ஒரு குக் கிராமம், நமக்குத்தான் டீ குடிக்கவில்லையென்றால் மண்டையே வெடித்து விடுமே!, ரூமிலிருந்து வெளியில் இறங்கி கடைத் தெருவுக்குச் சென்றேன், எங்கு தேடினும் தேனீர் விடுதி கண்ணில் படவில்லை, யாரிடமாவது கேட்கலாம் என்றால் எப்படி கேட்பது?,

Is there any teashop nearby?. என்று ஒருவரிடம் கேட்க, என்னை ஒரு முறைப்பு முறைத்து விட்டு "ஓ! மதராஸி.., ஆங்கிரேஸி இதர் நை சல்த்தாஹே பையா, பெஹ்லே ஹிந்தி ஸீக்கோ" என்று புரியாத பாஷையில் ஏதோ சொல்ல நான் மெல்ல நடையைக் கட்டினேன், அங்கு கண்டவர்களின் தலைப்பாகை மற்றும் உடைகளை வைத்து அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

பிறகு ஒரு பெட்டிக்கடையில் சென்று சைகை மூலம் "சாய் சாய்" என்றதும் அவர் சுத்த ஹிந்தியில், அவரின் கையை அசைத்து வழிகாட்டினார், அவரின் கை அசைவுகளை வைத்து டீக்கடையை கண்டு பிடித்தேன், அங்கு சென்று சைகை மூலம் ஒன்று என்று காட்டினேன், கடைகாரர் புன்முறுவலுடன் ஒரு கட்டிங்(டீயை கட்டிங் என்றுதான் அவர்கள் அழைக்கிறார்கள்) கொடுத்தார்.
டீ குடித்தவுடன் நிம்மதி என்றாலும், பாஷை தெரியாமல் இங்கு எப்படி காலம் தள்ளுவது மனதுக்குள் ஒருவித அச்சம் படர, ஊமை பாஷையுடன் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், வேலைக்காக சென்றிருந்த நான் பாஷை மற்றும் உணவின் காரணமாக ஒரு மாதத்திலேயே இடத்தைக் காலி செய்யவேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளானேன்.

அது முதல், பாஷை என்பது இறைவன் கொடுத்த மாபெரும் பேறு (அருட்கொடை) என்பது விளங்கியது. பல மொழி பேசக் கூடியவர்கள் வாழும் இங்கு (சவுதியில்) நான் கண்ட காட்சிகள் என் நம்பிக்கையை இன்னும் வழுப்படுத்தியது.

மூன்று வயது நிரம்பிய "பிலிப்பைன்ஸ்" தம்பதியரின் குழந்தை அதன் தாய்மொழியில் சரளமாக பேசியதைக்கண்டது,

ஆங்கிலத்தை நாக்கைச் சுழற்றி சுழற்றிப் பேசிய அமெரிக்கக் குழந்தை, அரபியைச் சரளமாகப் பேசிய அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தை,

இந்தியை சரளமாக பேசிய இந்தித் தம்பதியரின் குழந்தை, தெலுங்குக் குழந்தை, மலையாளக் குழந்தை, etc.. etc.

இக்குழந்தைகளைக் காணும் பொழுது என்னுள் எழும் ஆச்சரியங்களுக்கு விடையில்லை "இவர்கள் அனைவரும் எவ்வாறு, டிக்ஷ்னரி புரட்டாமல் சரளமாக பேசுகின்றனர்?".

"குழல் இனிது யாழ் இனிது"

நிச்சயம் மூன்று வயதுக் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் சரளமாக பேசும் பொழுது குழல் யாழ் எவ்வாறு இனிக்க முடியும்.

அன்னிய மொழி பேசும் குழந்தைகளுக்கு முன் அம் மொழி அறியா யாவரும் ஊமைதான்.

இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள நம் முன்னே கொட்டிக்கிடக்கும் காட்சிகள் ஏராளம், அதிலும் மொழி இன்றியமையாதது.

மற்ற ஜீவராசிகளுகுக் கிடைக்காத மாபெரும் பொக்கிஷமான மொழி மனிதனுக்கு கிடைத்திருக்கிறது, மனிதனின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணிகளில் மொழியும் ஒன்று.

6 comments:

  1. //மனிதனின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணிகளில் மொழியும் ஒன்று. //
    நிச்சயமாக!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், மேலான கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    இரு மொழிகள் அறிந்தவன் இரு மனிதர்களுக்கு சமமானவன் என்று முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது சகோ

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ..

      //இரு மொழிகள் அறிந்தவன் இரு மனிதர்களுக்கு சமமானவன் என்று முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது சகோ//

      வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி சகோ..

      Delete
  3. இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள நம் முன்னே கொட்டிக்கிடக்கும் காட்சிகள் ஏராளம், அதிலும் மொழி இன்றியமையாதது.//
    மிகச் சரியான உண்மையே . பக்கத்துக்கு வீட்டில் சவுராஷ்டிரா பேசும் ஒரு குடும்பம் இருந்தார்கள் அவர்களுக்கு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையும் அழகாக அந்த மொழியும் நம் மொழியும் புரிந்து கொண்டு பேசும் விதம் ஆச்சிரியமாக இருந்தது . ஓராண்டு அங்கு இருந்தும் எங்களால் பழகமுடியாத மொழி வருத்தமாகத்தான் இருக்கிறது .

    ReplyDelete
  4. //பக்கத்துக்கு வீட்டில் சவுராஷ்டிரா பேசும் ஒரு குடும்பம் இருந்தார்கள் அவர்களுக்கு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையும் அழகாக அந்த மொழியும் நம் மொழியும் புரிந்து கொண்டு பேசும் விதம் ஆச்சிரியமாக இருந்தது .//

    தங்களின் வருகைக்கும், பதிவின் வலுசேர்க்கும் அனுபவ(கருத்)த்திற்கும் நன்றி சகோதரி!.

    ReplyDelete