தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Wednesday, November 7, 2012

8 பாடம்…


ஒரு நிறுவனத்திற்கு படிப்பில் மிகவும் தேர்ந்த இளைஞன் ஒருவன் மேலாளர் பதவிக்கான நேர்முகத்தேர்விற்கு சென்றான்.

நடந்த அனைத்து சோதனைத்தேர்விலும் வெற்றி பெற்று, நிர்வாக அதிகாரியின்  இறுதி நேர்முகத்தேர்விற்கு சென்றான், இதில் தேர்ச்சி பெற்றால்தான் வேலை நிச்சயம்.

அவனுடைய சி.வி மற்றும் சான்றிதழ்களை பார்வையிட்ட நிர்வாக அதிகாரி, ஆச்சரியம் மேலோங்க அவனிடம் “நீ கல்வி உதவித்தொகை - ஸ்காலர்ஷிப் மூலம் படித்தாயா? என்று கேட்டார்.

அவன் “இல்லை சார்” என்றான்.

“உனது தந்தையே அனைத்து செலவுகளையும், ஏற்றுக்கொண்டு உன்னை படிக்க வைத்தாரா?”

“எனது தாயார்தான் என்னை படிக்க வைத்தார், எனக்கு ஒரு வயதாக இருக்கும் பொழுதே என் தந்தை இறந்து விட்டார்”

ஆச்சரியமடைந்த அதிகாரி “உன் தாய் என்ன வேலை செய்கிறார்?”

”எனது தாய் சலவை தொழில் செய்து வருகிறார், அவர்தான் என்னை படிக்க வைத்தார், அவரின் சம்பாத்தியம் தவிர்த்து வேறு எந்த வருவாயும் எங்களுக்கு கிடையாது”

“உனது கையை காட்டு” அதிகாரி இளைஞனிடம் வேண்டினார்.

மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருந்த அவனின் கையை பார்த்து விட்டு “உனது தாயாருக்கு என்றேனும் துணி துவைப்பதற்கு நீ உதவியிருக்கிறாயா”

“இல்லை, என் தாயின் விருப்பம் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே, மேலும், அவர் என்னை விட வேகமாக துணி துவைப்பார்”

”சரி, இன்று இரவு உன் தாயாரின் கைகளை கழுவி விட்டு நாளை என்னை  வந்து சந்தி, பிறகு நாம் மற்றவை குறித்து பேசலாம்”.

எப்படியாவது இந்த வேலையை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவன் வீட்டிற்கு சென்று அவன் இரவு துணி துவைப்பதற்கு தயாராக இருந்த அம்மாவிடம் சென்று அவன் தன் விருப்பத்தை கூறி அவரின் கைகளை கழுவ துவங்கினான்,

அம்மாவிற்கு தன் மகனின் என்றுமே இல்லாத இந்த புது நடவடிக்கை மிகுந்த ஆச்சரியம் மற்றும் மற்றற்ற மகிழ்ச்சியை கொடுத்தது,

அவன் அவரின் கைகளை கழுவும்பொழுது அவரின் கைகளில் அவன் முதன் முதலாக கண்ட சுருக்கமும், காய்ப்பும் சிறு சிறு கொப்பளங்களினால் அவருக்கு உண்டான வலிகளையும் அவன் கண்டதும் அவனின் உள்ளமும், கண்களும் கண்ணீரை தாரை தாரையாக கொட்டின.

“இந்த கைதானே என்னை இவ்வளவு பெரியவனாக வளர்த்தியது, இந்த கைதானே இத்தனை நாள் எனக்கு சோறு போட்டது, இந்த கைதானே என்னை படித்து பட்டம் பெற வைத்தது”

”எனது படிப்பிற்கான செலவுகள் அனைத்தையும் இந்த கையல்லவா இத்தனை நாள் கொடுத்துக்கொண்டிருந்தது”

நிர்வாக அதிகாரி கேட்ட கேள்வியின் அர்த்தம் அவனுக்கு இப்பொழுது புரிந்தது. அவனின் அழுகை நிற்கவில்லை.

அன்று இரவு தன் தாயிற்காக அனைத்து துணிகளையும் அவன் துவைத்தான், தன் தாயிற்காக அவனின் கண்கள் முதன்முதலில் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது.

இரவு வெகு நேரம் வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், “தன் தாய் கடந்து வந்த பாதைகள், சோதனைகள், அவள் பட்ட வேதனைகளை அனைத்தையும் அவனின் உள்ளம் கிரகித்துக்கொண்டது”

இத்தனை காலம் தனக்காக இவ்வளவு வேதனைகளை தாங்கிய தன் தாயிற்காகவாவது சாதிக்க வேண்டும் என்று அவன் மனதில் புது உத்வேகம் பிறந்தது”.

நேற்றைய இரவுச்சம்பவம் அவன் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தினால், காலை அலுவலகத்திற்கு மீண்டும் தேர்விற்காக வந்த அவனின் கண்களில் உள்ள கண்ணீரை கண்ட அதிகாரி அவனிடம் “நேற்று நீ வீட்டில் என்ன செய்தாய், அதன் மூலம் நீ பெற்ற படிப்பினை என்ன?”

”என் தாயின் கைகளை கழுவி, அனைத்து துணிகளையும் நானே துவைத்தேன்”

“உனது உணர்வு எவ்வாறிருந்தது?”

1)      உழைப்பின் அருமை அதன் அர்த்தம் புரிந்தது என் தாயின் உழைப்பு இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு முன்னுக்கு வந்திருக்க முடியாது.

2)      நேற்று எனது தாயார் தினசரி செய்யும் வேலையை செய்தபோதுதான் எனக்கு வாழ்க்கையை வாழ்வதும் ஒரு வேலையை செய்வதும் எவ்வளவு கடினம் என்பது புரிந்தது.

3)      குடும்ப பந்தத்தின் அருமையையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

”ஒரு மேளாலருக்கான தகுதியாக நான் நிர்ணயித்தது இதைத்தான், அடுத்தவரின் உணர்வுகளை மதித்து புரிந்து வேலை செய்பவர்தான் எனக்கு தேவை, அதை புரியாமல் வேலை செய்ய ஒரு இயந்திரம் போதும்”.

அந்நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த இளைஞன், தான் கற்றுக்கொண்ட உழைப்பின் அருமை, அடுத்தவர்களின்
உணவுகளை புரிந்து அவர்களின் கடின உழைப்பை ஊக்கப்படுத்துதல் மற்றும் டீம் ஒர்க் போன்ற காரணிகளை செயல்படுத்தியதால், அந்த நிதியாண்டில் அந்நிறுவனம் நல்ல இலாபத்தை அடைந்தது.

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ். நெகிழ்வூட்டும் கதை.

    //”ஒரு மேளாலருக்கான தகுதியாக நான் நிர்ணயித்தது இதைத்தான், அடுத்தவரின் உணர்வுகளை மதித்து புரிந்து வேலை செய்பவர்தான் எனக்கு தேவை, அதை புரியாமல் வேலை செய்ய ஒரு இயந்திரம் போதும்”.//

    நிதர்சனமான உண்மை...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம் சகோ.

      உங்கள் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    Good Post!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  3. சலாம் சகோ.சையத்,
    கதையும் கதை சொல்லும் நீதியும் அருமை. நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  4. மாஷா அல்லாஹ் சிந்திக்க தூண்டும் சிறப்பான சிறுகதை... ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ இயாக்கும், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete