தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Wednesday, November 21, 2012

16 உணர்வுகளை குறிவைக்கும் தாக்குதல்...

மனித நாகரீகம் தோன்றியது முதல், பொதுவில் செய்ய வேண்டிய விஷயம், மறைவில் செய்ய வேண்டிய விஷயம் என்று மனிதன் வகைப்படுத்தி வைத்திருந்தான். காரணம், தன்மானம் என்ற ஒன்றை காக்க வேண்டும் என்ற வேட்கை அவன் மனதில் இருந்தது தான்.

மிகப்பெரும்பான்மையோரால் இவை பாதுக்காக்கப்பட்டு வந்தாலும், ஒரு சிலரால் தவறவிடப்படும்  இது சமூகத்திற்கு மிகப்பெரும் தீங்கை விளைவித்து பெரும்பான்மையோரை வழிதவறச்செய்து கொண்டிருக்கிறது.

நான் ”டீன் ஏஜ்” என்ற பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்த சமயம், அப்பொழுது ஆனந்த விகடனில் வெளிவந்து கொண்டிருந்த ”டீன் ஏஜ்” கதைகள் அந்த சமயத்தில் 9 ஆம் வகுப்பில் காலடி எடுத்துவைத்திருந்த எங்களின் உணர்வுகளை சீண்டி வேடிக்கை பார்த்தது.
இத்தனைக்கும் இளைமறை காய்மறையாகவே ஒரு சில நிகழ்வுகள் அக்கதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பருவ வயது மாற்றங்கள், நெஞ்சில் நஞ்சை விதப்பதற்கு ஏதுவாக இருந்தது.
 
சிறிது காலத்திற்கு பின், ஆனந்த விகடனுடன் சரிக்கு சமமாக போட்டியிட இயலாத “குமுதம்” தேர்ந்தெடுத்த வழி ”நடுப்பக்கம்”.
சினிமா நடிகைகளின் ஆபாச புகைப்படங்களை நடுப்பக்கத்தில் போட்டு வாசகர்களை இழுத்தது. திருமணமாகாத இளைஞர்களை கவர்வதற்கு குறிவைத்த யுக்தியான இது இப்புத்தகத்தை போட்டி போட்டு வாங்க போதுமானதாக இருந்தது.
 
மக்களின் உணர்ச்சி தீயை போட்டி போடுவதில் ஊடகங்களின் பங்கு குறைவானதல்ல.
 
இவற்றை உரம் போட்டு வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சினிமாவையும் மறந்து விடக்கூடாது.
ஒரு காலத்தில் இந்தி படங்களை ஆபாசம், கவர்ச்சி என்று வெறுத்தொதுக்கிய ஒழுக்கமிக்க தமிழர்களின் அடுத்த தலைமுறை இதற்கு பழியாகி நிற்பது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது.
பெண்களை இன்றும் போகப்பொருட்களாக சித்தரிக்கும் கொடுமை “பம்பரம் விடுதல், ஆம்லேட் போடுதல்” என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
 

இது ஒருபுறமிக்க இதன் பரிணாம வெளிப்பாடாக, தற்போதைய இணையத்தின் பரிதாப நிலை. இதில் கண்க்கிட முடியாத நன்மைகள் பரவிக்கிடந்தாலும்  
ஒழுக்கம் தொலைத்தவர்களால் இங்கு நிகழ்த்தப்படும் ஒரு சில நிகழ்வுகள் அதில் கிடைக்கப்பெறும் அனைத்து நல்லவைகளை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. சில சமயம் இவை தனிமனித ஒழுக்கத்திற்கு விடப்படும் சவாலாக மாறுகிறது.

ரசனைக்கும்  ஒரு அளவுகோல் வேண்டும், அவற்றின் எல்லைகள் மீறப்படும் பொழுது அதைச்சார்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு அதுவே பொறுப்பாகி விடுகிறது. 

அவ்வகைளில் ஒன்று,  தற்பொழுதைய யுக்தியான பாலியல் உறுப்புக்களின்/உறவுகளின் காட்சிகளை வலையேற்றி மக்களின் ரசனையை பாழாக்கும் முயற்சி, இது இணையத்திற்கு புதிய விவகாரம் இல்லையென்றாலும் இவை எடுக்கும் அவதாரங்கள் மிகவும் புதியது மற்றும் ஆபத்தானது.


இன்று மிகப்பெரும்பான்மை இளம் வர்கத்தினரால் பயன்படுத்தப்படும்  சமூக வலைத்தளங்களின் காட்சிப்பரிமாற்றங்களில் (குறிப்பாக முகப்புத்தகம்) ஒரு கணக்கு இருந்தால் போதும் என்ற நிலையில் நமது நண்பர்களின் நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்று நம் பக்கங்களை அவை ஆக்கிரமிக்கும், அவற்றில் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளோ அல்லது அவர்களை வைத்து “Tag” செய்யப்படும் படமோ அல்லது செய்தியோ நமது பக்கங்களில் தோன்றும் அவ்வாறு செய்யப்படும் படங்களில் செய்திகளில் நாம் தணிக்கை செய்யும் வரை இவற்றிற்கு எந்த எல்லையும் கிடையாது, எது வேண்டுமானாலும் நமது பகுதியில் தோன்றலாம்.

பல நாடுகளால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று தடை செய்யப்பட்டிருக்கும் பாலுணர்வை தூண்டும் விஷயங்கள் மிக சர்வ சாதரணமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. இதன் எண்ணிக்கை தற்பொழுது அதிகமாக அதிரித்து “வாய் கூசும் பெயர்களுடைய” குழுக்களாக 18+ வரைமுறையின்றி வலம் வரத்துவங்கியுள்ளன.

”எது எக்கேடு கெட்டால் என்ன நாம் ஒழுங்காக இருந்து கொண்டால் போதும்” என்று நினைப்பவர்களை கூட இவை விட்டு வைப்பதில்லை.

இது போன்ற விஷயங்களை நாம் தேடிச்செல்லவேண்டியதில்லை, அதுவே தானாக நம்மை தேடி வரும். அந்த வகையில் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது.
 
மனதாலும், வயதாலும் பக்குவப்பட்டுவிட்ட நாம் இது போன்றவற்றை “ப்ளாக் - தடை” செய்வதன் மூலம் தடுத்துக்கொள்ளலாம். ஆனால், பக்குவப்படாத மற்றும் இதன்மீது தேட்டம் கொண்ட இளம் வயதினர், பள்ளி மாணவர்கள்?
இணையத்தில் இணைய ஒரு இணைய வசதி கொண்ட கைப்பேசி இருந்தாலே போதும் என்று சூழ்நிலைகள் எளிதாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மனிதகுலத்திற்கு ஊறு விளைவிக்கும் சக்திகள் வலுப்பெற ஆரம்பித்திருப்பது வருத்தமளிக்கும் விடயம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

அவற்றில் இருந்து இறக்கம் செய்யப்படும் தகவல்களும், படங்களும் “ப்ளூ டூத்” மூலம், இது போன்ற விஷயங்கள் சர்வசாதரணமாக பரிமாரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவை இள வயது கர்ப்பம், கருக்கலைப்பு, மன நிம்மதியின்மை போன்றவை ஏற்படக்காரணமாகின்றன.

மாணவர்களுக்கோ படிப்பின் மீதுள்ள நாட்டம் சிறிது சிறிதாக தேய்ந்து அவர்களை வேறு சில பல விஷயங்களுக்கு அடிமையாக்கி விடுகிறது.

ஒரு சில இளம்பெண்கள் மிரட்டப்பட்டும் அவர்களின் படங்கள் பதிவு செய்யப்படுகின்றன, அதோடு மட்டுமின்றி மனமுவந்து பணத்திற்க்காக காட்சியளிப்பவர்களின் படங்களும் இதில் இடம்பெருகின்றன.

ஏதேனும் பெண்ணின் மீது கோபம் இருந்தால் அவரின் பெயரில் ஒரு முகவரி உருவாக்கி அந்த பெண்ணே பதிவிடுவது போல் இவ்வகையான சமூக தீங்கை விளைவிக்கும் படங்கள் வெளியிடப்படுகின்றன.

அதுமட்டுமின்றி இவற்றின் பாதிப்பினூடாக உண்டாகும் பாலுணர்வை தூண்டும் உரையாடல்கள்/கருத்துப்பரிமாற்றங்களும் பெருகி வருகிறது, இவற்றின் தாக்கத்தின் வெளிப்பாடு ஒரு சில நிகழ்வுகளால் பதிவுலகிலும் உணரப்பட்டது.

இது போன்ற செயல்களுக்கான மூல காரணம் “மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதியை மறந்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம்" என்ற நிலைபாட்டை எடுத்ததனால்தான். இது அவனை மட்டுமின்றி சமூகத்தையும் ஆட்டிப்படைக்கிறது. இதுவே இது போன்ற ஒழுக்க சீர்கேட்டிற்கான வழியையும் திறந்து விட்டிருக்கிறது.

இவற்றை தவிர்க்க நமக்கு இருக்கும் வழிகளில் ஒன்றான “நமது பார்வைகளை பாதுகாத்துக்கொள்ளல்” மற்றும் இது போன்ற அசிங்களை காண நேரிட்டால் “ரிப்போர்ட்” என்பதை தேர்ந்தெடுத்து வலைத்தளங்களின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துதல், இது நம்மால் சமூகத்திற்கும் நமக்கும் செய்ய முடிந்த ஒரு சிறு உதவி.